அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஆணையின்படி, இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் வழிகாட்டுதலோடு நாடு முழுவதும் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் இன்று (7.6.2017) முதல் தொடங்க இருக்கிறது. இதை தொடக்கி வைப்பதற்காக தமிழக தேர்தல் அதிகாரி திரு. பாபிராஜூ, Ex.MP, துணை தேர்தல் அதிகாரிகளாக திரு. முருகன் முனிரத்தினம், திரு. சத்யன் புத்தூர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் வெற்றிகரமாக நடத்துவதற்கு தமிழக காங்கிரஸ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது. உறுப்பினர் சேர்ப்புக்கான படிவங்கள், உறுப்பினர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்த பெருமை காங்கிரஸ் பேரியக்கத்திற்கு உண்டு. ஆனால் தமிழகத்தில் நீண்டகாலமாக காங்கிரஸ் ஆட்சி இல்லையே, காமராஜரின் பொற்கால ஆட்சிமுறையை மீண்டும் காண முடியவில்லையே என்கிற ஏக்கம் காங்கிரஸ் கட்சியினரிடையே இருப்பதை என்னாலே காண முடிகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதன் மூலமே நமது நோக்கங்களை அடைய முடியும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு காங்கிரஸ் செயல்வீரருக்கும் இருக்கிறது.
நமது இயக்கத்தை வலிமைப்படுத்துவதன் மூலம் தமிழக அரசியலில் நமக்கென தனியிடத்தை நிச்சயமாக பெற முடியும். நமது கொள்கைகளும், லட்சியங்களும் நிறைவேற வேண்டுமானால் நமது இயக்கத்தை வலிமைப்படுத்துவதன் மூலமாகவே அதை நிறைவேற்ற முடியும். தமிழக அரசியலில் ஒரு குழப்பநிலை உருவாகியிருக்கிறது. இதை சரியாக பயன்படுத்த வேண்டுமென்று திரு. ராகுல்காந்தி விரும்புகிறார். எனவே, காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்துவதற்கு அரிய வாய்ப்பு இன்றைக்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தினால் நமது நோக்கத்தை அடைவதற்கு இளம் தலைவர் ராகுல்காந்தி தமிழக சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள தயாராக இருக்கிறார். காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் வெற்றிகரமாக நடத்தி ஜூன் 30 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். அடிப்படை அமைப்புகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான அட்டவணைகளை அகில இந்திய காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் உறுப்பினர் படிவங்களையும், உறுப்பினர் அட்டைகளையும் உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில் எந்த காலதாமதத்திற்கும் இடம் கொடுக்காமல் இப்பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் தலைமை கண்டிப்பாக கூறியிருக்கிறது. எனவே, உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை காலவரம்பிற்குள் தீவிரமாக நடத்தி முடிப்பதற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இதைத் தவிர, காங்கிரஸ் இயக்கத்தில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள், மற்றவர்களை சேர்க்க விரும்புபவர்கள் அனைவருக்கும் உறுப்பினர் படிவங்கள், உறுப்பினர் அட்டைகள் ஆகியவற்றை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளிலோ, தலைமையகமான சத்தியமூர்த்தி பவனிலோ எவரும் பெற்றுக் கொள்ளலாம். இந்த படிவங்களை உடனடியாக பெற்று காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை ஒருமாத காலத்தில் முடித்து, படிவங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். எந்த நிலையிலும் கால நீட்டிப்பு கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, காங்கிரஸ் நண்பர்களே, அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் சென்னை வருகையும், அவர் ஆற்றிய உரையும் காங்கிரஸ் இயக்கத்தினரிடையே மிகப்பெரிய எழுச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்கிற உணர்வு நம் அனைவரிடையேயும் மேலோங்கியிருக்கிறது. இச்சூழலில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் தொடங்கியிருக்கிறது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியில் மறுமலர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் உருவாக்கி நமது இயக்கத்தை தமிழகத்தில் முதன்மை இயக்கமாக மாற்றி புதிய சகாப்தம் படைக்க சூளுரை மேற்கொள்வோம்.

No comments:
Post a Comment