தமிழக நெடுஞ்சாலைத் துறையால் மொத்தம் 57,043 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் கட்டமாக, பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 377 கிலோ மீட்டர் சாலையை ஐந்தாண்டுகளுக்குப் பராமரிக்க 275 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்தப் பராமரிப்புப் பணிகளை இதுவரை சாலைப் பணியாளர்கள்தான் செய்து வந்தார்கள். இவர்களே இந்தப் பணியைத் தொடர்ந்து செய்தால், ஏறத்தாழ 70 கோடி ரூபாய்தான் செலவாகும். இதனால் அரசுக்கு 200 கோடி ரூபாய் மக்கள் வரி பணம் விரயமாகிறது. இந்தப் பணியைப் பெற்றுக்கொண்ட தனியார் நிறுவனங்கள், மிகப்பெரும் தொகையை ஆளுங்கட்சிக்கு லஞ்சமாகக் கொடுத்து வருகின்றன.
மாநில நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் பணியைத் தனியாருக்கு ஒப்படைப்பதென அ.தி.மு.க. அரசு முடிவுசெய்தது. இத்தகைய பணிகள் ஒட்டுமொத்தமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஒரு ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வால்பாறை சாலை (64 கிலோ மீட்டர்), அவிநாசி & திருப்பூர் & பல்லடம் & பொள்ளாச்சி சாலை (59.6 கிலோ மீட்டர்), பல்லடம் & கொச்சி முன்னோடி (41.6 கிலோ மீட்டர்) பொள்ளாச்சி & பாலக்காடு சாலை (15.8 கிலோ மீட்டர்), மற்றும் பொள்ளாச்சி & தாராபுரம் & கரூர் சாலை 10.54 கிலோ மீட்டர் ஆகிய ஐந்து மாநில நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு வேலை இந்தத் திட்டத்தின்கீழ் மேற்கண்ட ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொள்ளாச்சி பகுதியில் உள்ள 16 முக்கிய மாவட்டச் சாலை வேலைகளும் இந்த ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பின்கீழ் மாநில, மாவட்ட முக்கிய மற்றும் மாவட்ட இதர சாலைகள் என 54 ஆயிரத்து 43 சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2013&14இல் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகளுக்காக ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதியைப் பொய்கணக்கு எழுதி, போலி ஆவணங்கள் தயார்செய்து ரூபாய் 390 கோடி பல்வேறு பணிகளுக்குச் செலவு செய்யப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த வகையில், பராமரிப்புப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டதாகக் கூறி, காதும் காதும் வைத்தாற்போல் ரூபாய் 390 கோடி பணம் களவாடப்பட்டுள்ளது.அதேபோல, ஆதிதிராவிட குடியிருப்புகளுக்குச் சாலை அமைக்க தமிழகம் முழுவதும் 38 கோட்டங்களில் கடந்த 2014 ஜனவரி முதல் மார்ச் வரை மூன்று மாதங்களில் மட்டும் ரூபாய் 390 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி எதற்காக ஒதுக்கப்பட்டதோ அதற்காகச் செலவிடப்படாமல், பராமரிப்புப் பணிக்குச் செலவிடப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, இந்த முறைகேடுகளைக் கண்டுபிடிக்க முடியாது. சாலை அமைத்தல், பாலம் அமைத்தல் ஆகிய பணிகளில் முறைகேடு நடந்தால் அதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், பராமரிப்புப் பணிகளில் பணம் சுருட்டப்படுவதைக் கண்டுபிடிக்கவே முடியாது. அதனால்தான் அதன் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, ஒரே ஆண்டில் ரூபாய் 1,000 கோடி ஊழல் நடக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment