ஊழல் குற்றச்சாட்டு – 17 : நூலகத்துறையில் ஊழல் - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

ஊழல் குற்றச்சாட்டு – 17 : நூலகத்துறையில் ஊழல்


இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்த அதேநேரத்தில், நூலகத்துறையிலும் அத்தகைய பெருமையைப் பெற்றிருந்தது. தமிழகத்தின் நூலகத்துறை இந்தியாவிற்கே முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தது. அத்தகைய நூலகத்துறை கடந்த சில ஆண்டுகளாகச் சீரழிந்து வருவது மிகுந்த வேதனையைத் தருகிறது.

நூல்களைப் பணம் கொடுத்து வாங்கிப் படிக்க வசதியில்லாத கிராமப்புற ஏழை மக்கள், புதிய நூல்களை வாசிக்கச் செல்லும் ஒரே இடம், உள்ளூர் கிளை நூலகங்கள்தான். தமிழ்நாட்டில் சுமார் 4,000 கிளை நூலகங்கள் பொது நூலகத் துறையின்கீழ் பெயரளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடிப்படை வசதிகள் இல்லாமல், நூலகர்கள் இல்லாமல், புதிய நூல்கள் வாங்காமல், அமர்ந்து படிக்க இருக்கை வசதிகளும், போதிய இடமும் இல்லாமல் சீர்கெட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ரூபாய் 60 லட்சத்திற்குமேல் செலவுசெய்து புதுப்பிக்கப்பட்ட சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், இப்போது எந்த நிகழ்ச்சியும் நடத்த அனுமதி தராமல் பூட்டிவைக்கப்பட்டுள்ளது. பொது நூலகத் துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதிமுதல் 21ஆம் தேதிமுடிய தேசிய நூலக வார விழா கொண்டாடப்படும். அது மூன்று ஆண்டுகளுக்குமுன்பு அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள நான்கு பல்கலைக் கழகங்கள் நடத்தும் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பல்லாயிரக்கணக்கானோர் நூலகவியலில் பட்டங்களைப் பெற்று, வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொது நூலகத் துறையில் ஆயிரக்கணக்கான நூலகர் பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் உள்ள சுமார் 150 கிளை நூலகங்களில், 60க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள், நூலகர்கள் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றை நிர்வகிப்பது தினக்கூலிகள்தான். அதிலும் கிராமப்புறப் பகுதிநேர நூலகங்களை நிர்வகிப்பவர்களுக்குத் தினக்கூலி ரூ.20 மட்டும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கூலி கொடுக்க தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.

இந்திய அளவில் பெருமைபெற்ற சென்னை கன்னிமாரா பொது நூலகத்தில், 150பணியாளர்களும், நூலகர்களும் பணியாற்றவேண்டிய இடத்தில், தற்போது வெறும் 22 பேர்தான் பணியாற்றுகிறார்கள். அந்த நூலகத்தில் நூலகப் பணிகள் எப்படிச் செம்மையாக நடைபெறும்? நூலகர்களைக் கேவலப் படுத்துவது, தமிழ்நாட்டு வாசகர்களைக் கேவலப்படுத்துவதற்குச் சமமாகும்.

எதிர்கால தலைமுறையைச் செதுக்கிச் செம்மைப்படுத்துகிற நூலகத்துறையை லஞ்சவேட்டைக்கு உட்படுத்துவதைவிட கொடுமையானது வேறு எதுவும் இருக்கமுடியாது. நூலகங்களுக்கு வாங்குகிற நூல்களில் நடைபெறுகிற இமாலய ஊழலைக் கண்டு வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கெல்லாம் இறுதி முடிவுகட்டுகிற பொறுப்பு தமிழக மக்களிடம் இருக்கிறது.

No comments:

Post a Comment

Pages